subamenu எழுதியவை | ஜூன் 16, 2008

திருச்சி

அது 1961ம் ஆண்டு.ஊரிலிருந்து திருச்சிக்கு வந்தோம் படிப்பதற்கு,வாப்பா திருச்சி ராணித்தெரு வீட்டில்இருந்தார்கள்.என்னோடு என் தம்பி மற்றும் எனது உறவினர் பிள்ளைகள் என்று மொத்தம் எட்டுப்பேர் வந்தோம்.காயலிலும்,கீழக்கரையிலும் நாங்கள் சரியாகப்படிக்கவில்லை என்ற பொதுவான குற்றச்சாற்றின் பேரில் திருச்சியில் எங்கள் படிப்பை தொடர முடிவு செய்தார்கள்முதலில் நாங்கள் எல்லோரும் பிஷப் ஹீபர் உயர் நிலைப் பள்ளியில் சேர்வதற்காக விண்னப்பித்திருந்தோம்.நுழைவுத் தேர்வு நடந்தது.அதில் நான் மட்டும் பிஷப் ஹீபர் பள்ளியில் சேர்ந்தேன்.மற்றவர்கள் இடம் கிடைக்காததால் மற்ற பள்ளிகளில் சேர்ந்தார்கள்.நான் அப்போது III பாஃர்ம் என்று அழைக்கப்பட்ட,8ம் வகுப்பில்,சேர்ந்தேன்.எனக்கு 8ம் வகுப்பு ஆசிரியராக வில்லியம் டி மோசஸ் என்பவர் இருந்தார்.அவருக்கு முஸ்லிம்களை பிடிக்கவில்லை.மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்.ஆனால் மற்ற ஆசிரியர்கள் கிறித்தவர்களுக்கே உரிய அன்போடு பழகினர்.எனக்கு புதிய இடம்,புதிய சூழல்,மற்றும் கடுமையாக நடந்து கொள்ளும் ஆசிரியர் ஆகியவை மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது.பள்ளியில் இப்படி இருக்க வீட்டிலும் மிகவும் கடுமையான சூழல்.மற்றவர்களுக்கு நல்ல பள்ளிகளில் இடம் கிடைக்காத நிலையில் வீட்டின் அருகில் இருந்த சிறிய பள்ளியில் சேர்ந்தார்கள்.நாங்கள் எல்லோரும் காலையில் 4 மணிக்கே எழுந்துவிட வேண்டும்.வீட்டில் மொத்தம் 35 பேர் இருந்தோம்.அதாவது எங்கள் 4 கடைகளில் வேலை செய்த கீழக்கரை,மற்றும் காயலை சேர்ந்தவர்களும் அடக்கம். ஷாஜஹானையும் எங்களுடன் வாப்பா ஒரு பிள்ளையாக படிக்க வைத்தார்கள்.ஷாஜஹான் கீழக்கரையில் எங்கள் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தவரின் மகன்.அவனையும் தன் பிள்ளைபோல் வளர்த்தார்கள்.அவனும் அருகில் உள்ள பள்ளியில் மற்ற பிள்ளைகளுடன் படித்துக்கொண்டிருந்தான்.அத்துனை பேரும் குளிப்பதற்கு அந்த வீட்டில் தண்ணீர் பற்றாததால் காலையில் நாங்கள் 4மணிக்கே எழுந்து தொழுதுவிட்டு,துண்டு உடைகள் எடுத்துக்கொண்டு 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள L.K.S.ஜீவல்லர்ஸ் வீட்டிற்கு குளிக்கச் செல்வோம்.பாதி தூக்கம்,அசதியுடன் அங்கு போய் சேருவோம்.குளிர் காலத்திலும்,மழை காலத்திலும் சொல்லவே வேண்டாம்.என் தம்பி எழுந்ததுமே தூங்கி வழிவான்.அமீர் மச்சான் எங்கள் எல்லோறையும் எழுப்பிவிடுவார்.தம்பி எழுந்தஉடன் கழிவறையில் போய் அங்கு தூங்கிகொண்டே காலைக்கடனை முடிப்பான்.பின்பு L.K.S. வீட்டிற்கு வந்தபின் அங்குள்ள குளியல் அறை படிகளில் தூங்குவான்.ஒருவாறு குளித்துவிட்டு வீடுவந்து சேர்வதற்குள் விடிந்திருக்கும்.பிறகு குரான் ஓதுவோம்.அமீர் மச்சான் எங்கள் எல்லோருக்கும் ஓதச்சொல்லித் தருவார்கள்.தொழுகைமுறை,கலிமா(மார்கக்கடமை)ஆகியவையும் கற்பிப்பார்.8மணியானதும் காலை உணவு சாப்பிடச்செல்வோம். அத்தனை பேருக்கும் ஒரே சமையல்தான்.காயலை சேர்ந்த மம்மியப்பா என்று அழைக்கப்பட்ட முகம்மது முகைதீன் என்பவர் சமையல்காரராக இருந்தார்.அவருக்கு உதவிக்கு பீப்பா என்று அழைக்கப்பட்ட அப்துல் காதரும் இருந்தான்.மம்மியப்பா இட்லி,உப்புமா, தோசை,தேங்காய்கஞ்சி,கோதுமைதோசை,என்று ஏதாவது செய்திருப்பார்.எல்லோருக்கும் அளவுதான்.காலை உணவிற்கு பிறகு பள்ளிக்கூட புத்தகப்பையை எடுத்துக்கொண்டு,செயற்கை வைர கடைக்கு வந்து அங்கு உட்கார்ந்து படிக்க வேண்டும்.வாப்பா கடைக்கு வந்ததும் 9மணியளவில் நாங்கள் பள்ளிக்குப் போக அனுமதி தருவார்.நான் பள்ளிக்கு நடந்து போவேன்.பள்ளி தெப்பக்குளத்திற்கு அருகில் இருக்கும்.பள்ளியின் புதிய சூழல்,வகுப்பு ஆசிரியரின் கடுமை,எல்லாம் பெருத்த சுமையாக இருக்கும்.கிராமத்திலிருந்து வந்த எனக்கு,பாடங்கள் கடினமாக இருந்தது.இருந்த போதிலும் வகுப்பில் சுமாரான மானவனாக இருந்தேன்.இத்தனை கஷ்டங்கள் இருந்த போதிலும்,இளம் வயது காரனமாக எதுஉம் பெரிதாக தெரியவில்லை.சிறு சிறு சந்தோசங்கள்கூட பெரிதாக தெரிந்தது.ஆரம்பத்தில் பகல் உணவிற்கு,நான் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு போவேன்.ஒருமுறைசாப்பிட்டுச்செல்ல நேரமாகி வகுப்பில் தண்டனை பெற நேர்ந்தது.அப்போது முதன்முறையாக வாப்பாவிடம் பள்ளிக்கு பகல் உணவு அனுப்பும்படி போராடினேன்.முதலில் மறுத்த வாப்பா,பின்பு சம்மதித்து,கூடைக்காரர் மூலம் சாப்பாடு பள்ளிக்கு வந்தது.அடுத்த ஆண்டு ஜெபருல்லாவும்,நிஸ்தாரும், பிஸப் ஹீபரில் சேர்ந்தனர். எங்கள் மூன்று பேருக்கும் வீட்டிலிருந்து ஒரு பெரிய வெங்கல டிபன் கேரியரில் பகல் உணவு சாப்பாட்டு கூடை ஆள் கொண்டு வருவார்.அவர் தூரத்தில் வரும்போதே அதுமட்டும் தனியாக தெரியும்.அதை பார்த்து நன்பர்கள் சாப்பாட்டு கோபுரம் வருகிறது என்று கேளி செய்வார்கள். சாப்பாட்டு நேரத்தில்,சாப்பிட்ட நேரம்போக,கொஞ்சம் விளையாட நேரமும் கிடைத்தது.மாலையில் பள்ளி 4.30 மணிக்கு முடிந்ததும்,5மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும் என்பது வாப்பாவின் கட்டளை.எனக்கும் எல்லோறையும் போல் விளையாட ஆசை.ஆனால் 5மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும் என்பதால் விளையாட முடியாமல் ஆசையை அனை போட்டுவிட்டு வீட்டிற்கு வருவேன்.சில சமயத்தில் வரும் வழியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்ததில் நேரமாகி வீட்டில் உதைவாங்கியதும் உண்டு.திருச்சியில் நடைபாதைகளில் பல விதமான வேடிக்கைகள் நடக்கும்.தேள்,பாம்பு,போன்றவற்றை வைத்துக்கொண்டு,விஷ கடிகளுக்கு மருந்து இலவசமாக தருவதாக கூறி பணம் பறிக்கும் கும்பல்,சுலபமாக ஜெயித்து விடலாம் என்று நம்பிக்கையூட்டி,ஏமாளிகளிடம் பணம் முழுவதையும் பிடிங்கிக்கொள்ளும் நாடாக்குத்து சூதாட்டக்காரர்கள்,திராவிட இயக்க பாடல்களை பாடும் தெருப்பாடகர்கள்,சிறு சிறு வித்தைகள் காட்டும் கலைக்கூத்தாடிகள்,என்று பல விதமான தெருக்கவர்ச்சிகள்தான் எனக்கு பொழுதுபோக்காக இருந்தன.அவற்றில் மிகவும் நான் கவரப்பட்டது,ஹிப்நாடிசம் செய்வதாக விளக்கம் அளித்து கருப்பு துணியால் ஒரு சிறுவனை மூடி,அவன் ஹிப்நாடிசம் மூலம் பதில் அளிப்பான் என்று கூறி,சாலையில் செல்லும் வாகனங்களின் எண்கள் முதல் பார்வையாளர்களின் சட்டைப்பையில் இருக்கும் பொருட்கள் வரை சொல்லவைப்பது ஒன்று.அப்போது நான் ஹிப்நாடிசம் மூலம் அவற்றை சாதிக்க முடியும் என்று நம்பினேன்.அதுவே பின்பு என்னை ஹிப்நாடிசம் பற்றி அறிந்து கொள்ள அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி அது பற்றி படிக்க ஈடுபாடு ஏற்பட்டது.
5மணிக்கு வீட்டிற்கு வந்ததும் கொஞ்ச நேரம் இருட்டும் வரை மொட்டை மாடியில் நிற்கலாம்.அதற்குள் லுஹர்(பகல்)அஷர்(மாலை)தொழுகைகளை முடித்திருக்க வேண்டும்.மொட்டை மாடியில் அந்த மாலை நேரக்காற்றை அனுபவித்ததும் அந்த காலகட்டத்தில் சந்தோசமான நேரங்கள்.சந்தோசம் என்ன என்று அறியாத காலத்தில் அவைதான் சந்தோசங்கள்.
இன்றும் திருச்சி என்று நிணைக்கும்போது சிறு சிறு கோயில்களிலிருந்து வரும் கற்பூரம் கலந்த பூ வாசனை,மாலையில் கடைகளில் வாசல் தெளிக்கும் போது வரும் மண் வாசனை,திறந்த சாக்கடை நாற்றம்,குளோரின் அதிகம் கலந்த குலாய் நீர்,கரை புரண்டு ஓடும் காவேரி,பழங்கால பாணி சினிமா அரங்குகள்,அந்த பெரிய காந்தி மார்கட் ஆகியவைதான் நினைவில் வரும்.
திருச்சியை பொருத்தவரை எனக்கு நன்பர்கள் அதிகம் இல்லை.அதற்கு என் தனிமை விருப்பமே காரணம்.வீட்டில் என் தம்பியை விட ஜெபருல்லாவிடம் அதிகமான நட்புடன் இருந்தேன்.எனக்கும் அவனுக்கும் இரண்டு மூன்று வயது வித்தியாசம் இருந்த போதிலும்,அதிக நட்புடன் நடுவயது வரை தொடர்ந்தது.பின்பு ஏற்பட்ட சில சம்பவங்கள் எங்களை சற்று தள்ளி இருக்க செய்தது.இருந்த போதிலும் அந்த நட்பை நான் என்றும் மறந்ததில்லை.எங்கள் இந்த நட்பு பற்றி பின்பு ஒரு சமயம் சொல்கிறேன்.பள்ளி நன்பர்களில் நான் மிகவும் நெருங்கி பழகியது ஜெயனுடன்தான்.அவனுடைய நட்பு இன்றுவரை தொடர்கிறது.சென்ற டிசம்பர் விடுமுறையில் இந்தியா சென்றிருந்தபோது,திருச்சிக்குப்போய் அவனைப்பார்த்து வந்தேன்.என் துனைவியும் மகளும் உடன் வந்தனர்.சர்க்கரை நோயால் அவதிப்பட்டு,கண்பார்வை இழந்து அவன் துன்பப்படுவது என்னை மிகவும் காயப்படுத்தியது.எப்படி இருந்தவன்? அவனுடன் அவன் துனைவி மட்டும் இருந்தார்.அவனுடைய ஒரே மகள் திருமனமாகி அமெரிக்காவில் இருக்கிறார்.அவன் துனைவியார் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக இருந்தார்.பகலெல்லாம் தனிமையில் கழிகிற அவன் வாழ்கையை நினைத்து மிகவும் வருந்தினேன்.அவன் மகள் குழந்தை உண்டாகி இருப்பதால், கோடை விடுமுறையில் அவன் துனைவியார் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும்,அப்போது அவனை மதுரைப்பக்கமுள்ள ஒரு ஊரில் முதியவர் இல்லத்தில் சேர்க்கப்போவதாகவும் சொன்னார்கள்.அது என்னை மிகவும் பாதித்தது.குடும்பங்கள் கூட்டுக்குடும்பங்களிலிருந்து மாறி அணுக்குடும்பங்களாகி மணிதனை தனிமைப்படுத்தி விட்ட அவலத்தை நினைத்து வருந்தினேன்.எங்களுக்கும் ஒரு மகள்தான் இருக்கிறாள்.அதிகம் பெற்றுக் கொள்ளாததற்காக வருந்தினேன்.என் மகளை அதிகப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டோம். பேரப்பிள்ளைகளையாவது அதிகமாக பார்க்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.வேண்டுகிறோம்.

ஜெயனின் நட்பு பற்றி அடுத்த பகுதியில் எழுதுகிறேன்-

வகைகள்